நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய சினிமாவுக்குத் திரும்பும் விஜய் பட நடிகை
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் நட்சத்திர நடிகையான பிரியங்கா சோப்ரா நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய சினிமாவுக்குத் திரும்புவது உறுதியாகியுள்ளது.
ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியங்கா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் வரவிருக்கும் படமான SSMB29 இல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, SSMB29 படக்குழுவினருடன் செட்டில் ஹோலியைக் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் மற்றும் குழுவினருடன் படங்களை வெளியிட்ட அவர், "இது எங்களுக்கு ஒரு வேலை ஹோலி. உங்கள் அனைவருக்கும் மிகவும் இனிய ஹோலி வாழ்த்துக்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா SSMB29 படத்தில் இடம்பெற்றுள்ளது உறுதியாகியாகி இருந்தாலும், படக்குழு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து தற்போதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய படம்
பிரியங்கா சோப்ராவின் கடைசி இந்திய படம்
பிரியங்கா சோப்ரா கடைசியாக தி ஒயிட் டைகர் என்ற ஒரு இந்திய படத்தில் 2021இல் நடித்தார். அதைத் தொடர்ந்து தி மேட்ரிக்ஸ் ரிசர்ரெக்ஷன்ஸ், சிட்டாடல் மற்றும் லவ் அகெய்ன் போன்ற ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், தற்போது அவரது இந்திய திரைப்பட வருகை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SSMB29 படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு குறிப்பிடத்தக்க வேடத்திலும் நடிக்கின்றனர்.
படத்தைப் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே இருந்தாலும், ராஜமௌலியின் முத்திரை பதித்த பிரமாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் கதைசொல்லலுடன் கூடிய வரலாற்று புராண நாடகமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்கா சோப்ரா தமிழில் 2002இல் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.