31 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஹிட் ஜோடி! பிரபு - சுகன்யா இணைந்து நடிக்கும் புதிய படம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் செந்தமிழ்ப் பாட்டு, சின்ன மாப்ளே, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபு மற்றும் சுகன்யா தனி வரவேற்பைப் பெற்றனர். இவர்கள் இருவரும் சின்ன மாப்ளே படத்திற்குப் பிறகு சுமார் 31 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். மேரி கோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் இவர்கள் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள்
மேரி கோல்டு படத்தின் நட்சத்திரப் பட்டாளம் மற்றும் படக்குழு
இப்படத்தில் பிரபு மற்றும் சுகன்யாவுடன் இணைந்து ரக்ஷன், நம்ரிதா, சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்குச் சுதர்சன் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார்.
பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இத்திரைப்படத்திற்கு மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
குடும்பக் கதை
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பின்னணியில் குடும்பக் கதை
இப்படத்தின் கதைக்களம் மற்றும் பின்னணி குறித்து படக்குழுவினர் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களைச் சேர்ந்த மனிதர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும், அவர்களின் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகிறது.
தென் தமிழகப் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படம் அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் படமாக்கப்படவுள்ளது.