லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இத்திரைப்படம் உலக அளவில், சுமார் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. நேற்று இப்படத்தில் இடம்பெற்ற 'ஆர்டினரி பர்சன்' பாடலை இசையமைப்பாளர் அனிருத் யூட்யூபில் பதிவேற்றினார். இதன் பின்னர், 'பீக்கி பிளைண்டர்ஸ்' ஓடினிக்காவை அணுகிய பலர், அவருடைய 'ஐஅம் நாட் அவுட்சைடர்' பாடல் போல இந்த பாடல் உள்ளது என கூறிவருகின்றனர்.
சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ள ஓடினிக்கா
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக பதில் அளித்துள்ள ஓடினிக்கா,லியோ திரைப்படத்தை பற்றிய நூற்றுக்கணக்கான செய்திகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர், தனது இன்ஸ்டாகிராம் மெயில் மற்றும் யூடியூபில் உள்ள வீடியோக்களுக்கு கீழ் வரும் அனைத்து கேள்விகளையும் பார்த்ததாகவும், அதற்கு ஒவ்வொன்றாக பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தவர், 'ஆர்டினரி பர்சன்' சர்ச்சை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சிறிது காலத்துக்குப் பிறகு இது குறித்த கருத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனிருத்துக்கு துணை நிற்கும் அவரது ரசிகர்கள்
இந்த சர்ச்சையில் அனிருத்திற்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். அனிருத் ஒரு மிகப்பெரிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' ரசிகர் என்பதால் இப்பாடல் 'பீக்கி ப்ளைண்டர்ஸ்'லிருந்து ஈர்க்கப்பட்டது எனவும் காப்பியடிக்கவில்லை எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஒட்னிக்கா, தனது வீடியோவிற்கு கீழ் ஒருவர் இது குறித்து கேட்டதற்கு, "லேபிளுக்கு பதிப்புரிமை இல்லை மற்றும் கலைஞருக்குத் தெரியாமல் உரிமம் வழங்க முடியாது. யாரும் என்னையும் எனது குழுவையும் தொடர்பு கொள்ளவில்லை" என தெரிவித்திருந்தார்.