விஜய் சேதுபதியின் 'பத்தா' முதல் கீர்த்தி சுரேஷின் 'அக்கா' வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
செய்தி முன்னோட்டம்
வார இறுதி நாட்கள் வந்துவிட்டாலே திரையரங்குகளை தாண்டி, வீடுகளிலேயே அமர்ந்து கண்டுகளிக்க ஓடிடி தளங்களில் என்னென்ன புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் காட்டும் ஆர்வம் எப்போதும் அலாதியானது. அந்த வகையில், இந்த வார இறுதியில் ரசிகர்களுக்குத் தடபுடலான என்டர்டெயின்மென்ட் விருந்து படைக்கும் வகையில் விஜய் சேதுபதியின் பத்தா, ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா, ஜி.வி. பிரகாஷின் இம்மார்டல் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அக்கா வெப் தொடர் எனப் பல படைப்புகள் முக்கிய ஓடிடி தளங்களில் வரிசைகட்டி நிற்கின்றன.
OTT
ரசிகர்களைக் கவர வரும் விஜய் சேதுபதியின் பத்தா
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'பத்தா' திரைப்படம் நாளை நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
ஊரில் பெரிய தாதாவாக வலம் வரும் விஜய் சேதுபதியை, சிறுவன் ஒருவன் பள்ளி கழிவறையில் பூட்டிவைக்கும் சுவாரசியமான டார்க் காமெடி களத்தைக் கொண்ட இப்படம் ஓடிடி பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான சிக்மா திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், ஓடிடி ரசிகர்களைக் கவரும் முனைப்பில் இப்படம் களம் காண்கிறது.
வெப் தொடர்
கீர்த்தி சுரேஷின் அக்கா தொடரும் வெளியாகிறது
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்த இம்மோர்டல் திரைப்படம் அக்டோபர் 30 அன்று சோனிலிவ் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
மறுபுறம், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் கேங்ஸ்டர்களாக நடித்த பெண்களை மையமாகக் கொண்ட அக்கா வெப் தொடர் வரும் அக்டோபர் 30 அன்று நெட்ஃபிலிக்ஸ் வெளியாகிறது.
கொரிய வெப்டூனைத் தழுவி மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் கௌரி கிஷன், ஜெயசுதா, மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள லவ் ஆல்வேஸ் அக்டோபர் 30 அன்று ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.