செப்டம்பர் 1 முதல் புது படங்கள் ரிலீஸ் இல்லை! ஓடிடி விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் திரைப்படப் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணிப் பணிகளையும் இடைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஓடிடி நிபந்தனை
8 வார ஓடிடி நிபந்தனையும் திரையரங்க உரிமையாளர்களின் முடிவும்
திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் முன்னெடுத்தன.
தயாரிப்பாளர்களிடம் இதற்கான ஒப்புதல் கடிதத்தைப் பெற்ற பின்னரே படங்களைத் திரையிடுவோம் என விநியோகஸ்தர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்ததே இந்த மோதல் போக்கிற்கு முதன்மை காரணமாக அமைந்தது.
சங்கம் எதிர்ப்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடும் எதிர்ப்பு மற்றும் நஷ்டக் கணக்கு
மற்ற தென்னிந்திய மொழித் திரையுலகில் இல்லாத ஒரு கடுமையான விதியைத் தமிழகத்தில் மட்டும் தயாரிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் திணிப்பதை ஏற்க முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழில் ஆண்டுக்கு 250 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகினாலும், பெரும்பாலான படங்கள் நஷ்டத்தை சந்திப்பதால் சுமார் ₹200 கோடி வரையிலான இழப்பை ஈடுகட்டத் தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களையே நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது.
சிக்கல்
தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மோதலால் எழும் சிக்கல்
செப்டம்பர் மாதத்தில் மண்டாடி, சர்தார் 2, டிமான்ட்டி காலனி 3 உட்படப் பல முக்கியத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தன.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள இந்த வேலைநிறுத்த முடிவால், முன்னணி மற்றும் சிறிய பட்ஜெட் படங்களின் வெளியீடு முற்றிலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதனால் திரையரங்க உரிமையாளர்களும், ரசிகர்களும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
தமிழக அரசு
தமிழக அரசின் தலையீட்டை எதிர்பார்க்கும் தமிழ் திரையுலகம்
தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையேயான இந்த ஓடிடி கால இடைவெளி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள இந்த வணிக நெருக்கடியைத் தீர்க்கவும், திரைப்படத் துறையின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரியத் தீர்வு காண வேண்டும் எனத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.