70வது தேசிய விருதுகள் அறிவிப்பு; திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் நித்யா மேனன்
2022ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் கதாநாயகியாக நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த பாடலான "மேகம் கருக்காதா" பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்பிற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை நடன இயக்குனர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் பெறவுள்ளனர். இதற்கிடையே சிறந்த படமாக மலையாளத்தின் ஆட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு, சிறந்த நடிகராக "காந்தாரா" ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் முக்கியமான விருதுகளை தென்னிந்திய சினிமாக்கள் வென்றுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 தேசிய விருதுகள்
தேசிய விருது வென்ற தமிழ் சினிமாக்கள்
70வது தேசிய திரைப்பட விருது விழாவில் தேசிய அளவில் தென்னிந்திய சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்திய இலையில், தமிழ் சினிமாவில் திருச்சிற்றம்பலம் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகியவை மொத்தம் 6 விருதுகளை கைப்பற்றியுள்ளன. தமிழ் சினிமாவின் சிறந்த படமாக பொன்னியின் செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் சிறந்த பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மான் விருது பெறுகிறார். இது அவர் பெறும் ஏழாவது தேசிய திரைப்பட விருதாகும். இந்த படம் மேலும் சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவிற்கும் விருது பெற்றுள்ளது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, திருச்சிற்றம்பலம் படம் சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடன வடிவமைப்பிற்கான விருதுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.