'9 மாதமாக புதுப் படத்தில் நடிக்கவில்லை': அட்லீயின் ராக்கா வதந்திகளுக்கு மிருணாள் தாகூர் பதில்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், கடந்த 9 மாதங்களாகப் புதிய படங்கள் எதிலும் தான் ஒப்பந்தமாகவில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட அறிவியல் புனைகதைத் திரைப்படமான ராக்காவில் மிருணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்தத் தகவல்களை அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யாமல் மர்மத்தை நீடிக்க வைத்துள்ளார்.
விளக்கம்
"வாய்ப்புகள் இல்லை என்பதற்காக அல்ல"
தனது திரைப்பயணம் குறித்துப் பேசிய மிருணாள் தாகூர், "நான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்காதது காரணமல்ல".
"தற்போது உருவாக்கப்பட்டு வரும் கதைகளுடன் என்னால் மனதளவில் ஒன்றிணைய முடியவில்லை. ஒரு படத்திற்காக படப்பிடிப்புத் தளத்தில் 120 நாட்கள் செலவிட வேண்டியுள்ளது".
"தினமும் காலையில் படப்பிடிப்பிற்குச் செல்லும்போது, நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்ற விரக்தி வரக்கூடாது. வெறும் புகழும் பாராட்டுகளும் மட்டும் போதாது".
"படைப்பு ரீதியான முழுமையான ஆத்ம திருப்தி கிடைக்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் தரமான படைப்புகளில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்பு
கின்னஸ் சாதனை படைத்த அட்லீயின் ராக்கா திரைப்படம்
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா திரைப்படம் 2027-ஆம் ஆண்டு திரைக்கு வரத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை வைத்து ரியல்-டைம் மோஷன் கேப்சர் முறையில் படமாக்கப்பட்டு ஏற்கனவே கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள இப்படம், ஹாலிவுட்டின் அவதார் படத்தையே மிஞ்சும் காட்சிகளைக் கொண்டிருக்கும் எனப் படக்குழுவினர் பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.
அத்தகைய பிரம்மாண்ட திரைப்படத்தில் மிருணாள் தாகூர் நடிப்பாரா என்ற கேள்விக்கு, நான் ஏதேனும் படத்தில் ஒப்பந்தமானால் அதை எனது சமூக வலைத்தள பக்கத்தில் முறைப்படி அறிவிப்பேன் என்று அவர் பதிலளித்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.