பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்
மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில். இவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 63 . இவருக்கு கல்லீரல் செயல்பாட்டில் கோளாறு இருந்ததாகவும், நிமோனியா காய்ச்சலுக்காகவும் சென்ற மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர், ECMO கருவி பொறுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு அவர் உயிர் பிரிந்தது. இதை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், பிரசன்னா உட்பட பல நட்சத்திரங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
'காண்ட்ராக்டர் நேசமணி'-ஐ நமக்கு அறிமுகம் செய்த இயக்குனர்
மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்த சித்திக், தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தந்திருந்தாலும், அனைத்தும் வெற்றி படங்களே. விஜய்-சூர்யா-வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தை இயக்கி இருந்தது சித்திக் தான். 'காண்ட்ராக்டர் நேசமணி' என்ற மறக்க முடியாத கதாபாத்திரைத்தை வடிவமைத்தவர் இவரே. தொடர்ந்து, 'சாது மிரண்டா', 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களை இயக்கினார். இயக்குனர் சித்திக்கிற்கு, ஏற்கனவே சுவாச பிரச்னைகள் இருந்ததாகவும், அது தீவிரமடைந்து, அவரின் கல்லீரலை பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஜூலை 10-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்திக், நேற்று காலமானார். அவரின் மறைவு மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது