தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரிகள்: ஒரு பார்வை
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி அதன் மோசமான ஏற்பாட்டிற்காக கண்டனங்களை ஈர்த்து வருகிறது. ரஹ்மானின் இசை நிகழ்ச்சில் சமீப காலங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்த வண்ணம் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் சமூக பொறுப்புள்ள மனிதராக அறியப்படுபவர். அதே சமயம், தன் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்தவும் அவர் தவறுவதில்லை. மக்களிடையே, அவரின் இசையை தாண்டி, ஒரு தனி மனிதராக, ரஹ்மானுக்கு எப்போதுமே நற்பெயர் உண்டு. ஆனால், சில சந்தர்ப்பங்களில், அவர் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. அப்படி, ரஹ்மான் கச்சேரிகளில் சலசலப்பு ஏற்பட்ட சில சம்பவங்களை இங்கே பார்க்கலாம்.
புனே இசைநிகழ்ச்சி
சில மாதங்களுக்கு முன்னர், புனேவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ரஹ்மான். அப்போது திடீரென ஒரு காவல் அதிகாரி, மேடை மீது ஏறி, இசை நிகழ்ச்சியை நிறைவு செய்யமாறு உத்தரவிட்டார். அப்போது மேடையில் பாடிக்கொண்டிருந்த ரஹ்மான், முதலில் சிறிது அதிர்ந்தாலும், தொடர்ந்து விதிகளை மீறக்கூடாது எனக்கூறி இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அதற்கு காரணம், 2005 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இரவு 10 மணிக்கு மேலே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மேற்கோள் காட்டியே, புனே காவல் துறை, அந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர்.
கோவை இசைநிகழ்ச்சி
கோவையில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது ரஹ்மானின் இசை கச்சேரி. அதில் பொதுமக்கள் தடுப்புகளை தாண்டி மேடை அருகே செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. பொதுமக்கள், தனி மனித ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கடைபிடிக்காமல், தடுப்புகளை உடைத்துக்கொண்டு முந்தி அடித்துக்கொண்டு ஓடியது வரவேற்க தக்கதாக இல்லை. பலரும் இந்த செயலுக்காக பொதுமக்களை கண்டித்தனர். அதேபோல, ரஹ்மானை காண வந்த அடக்க முடியாத ரசிகர்கள் கூட்டமாதலால், ரஹ்மானால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
'மறக்குமா நெஞ்சம்'- சென்னை இசைக்கச்சேரி
தற்போது சர்ச்சைக்குள்ளான 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை முதலில், சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தன்னுடைய 30 ஆண்டுகால திரைப்பயணத்தை, தமிழ்மக்கள் முன்னிலையில் கொண்டாட வேண்டும் என இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் ரஹ்மான். ஆனால் அப்போது பெய்த திடீர் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்த சர்வதேச தரத்தில் ஒரு உள் அரங்கம் இல்லையே என தான் வருந்துவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.
சர்ச்சையான 'மறக்குமா நெஞ்சம்'
ரஹ்மான் அறிவித்திருந்தது போல சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு அரங்கில், நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான கூட்டம் அனுமதிக்கப்பட்டதா? என விசாரிக்க தாம்பரம் காவல் ஆணையர் உத்தவிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்காக கலந்துகொள்ள வந்தவர்களால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாயும் சிக்கியது கூடுதல் சர்ச்சையாகியுள்ளது.