மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, ரஹ்மான், தான் யாரையும் குறை கூற விரும்பவில்லை எனவும், தானே இந்த அசௌகரியத்திற்கு பொறுப்பேற்பதாகவும் பதிவிட்டு, இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளையும், டிக்கெட்டுகளையும் புகைப்படம் எடுத்து தன்னுடைய அணியின் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தார்.
இந்நிலையில் சிலர், இந்த இசை நிகழ்ச்சி மோசமாக ஏற்பாடு செய்ததற்கு, ரஹ்மானும் துணைபுரிந்துள்ளார் என்பது போல குற்றசாட்டுகளை சுமத்தவே, ரஹ்மானின் மகள் கதீஜா மற்றும் ரஹீமா ஆகியோர், தங்கள் தந்தை ஆதரவாக விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்களை தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, இயக்குனர் ஒபேலி கிருஷ்ணா என திரையுலகினர் பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.
card 2
ஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட்
கார்த்தி, தனது X-தளத்தில், "நாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது அன்பு செலுத்தி வருகிறோம். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் என் குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, ஆனால் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரஹ்மான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்" என்றுதெரிவித்துள்ளார்.
மறுபுறம் யுவன்,"மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் இருந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாடம் கற்கவேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பை, ஏற்பாட்டாளர்கள் கவனித்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் மேடையில் நிற்கிறோம். ஒரு சக கலைஞராக நான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.