இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு: எர்ணாகுளம் போலீசார் விசாரணை
செய்தி முன்னோட்டம்
மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பாலியல் அத்துமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், கடந்த 2022-ஆம் ஆண்டு எலங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த சிதம்பரம், தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 74 மற்றும் 75 ஆகிய பிரிவுகளின் கீழ் (பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விசாரணை
விசாரணை தீவிரம்
இந்த வழக்கு தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இயக்குநர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கைது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு சிதம்பரத்தின் முதல் படமான 'ஜான்.இ.மேன்' (Jan.E.Man) படத்தில் நடித்த சமூக வலைதளப் பிரபலம் ஒருவர், சிதம்பரம் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் கூறியிருந்தார். ஆனால் அப்போது முறைப்படி புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. தற்போது அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருப்பது அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.