LOADING...
வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி நீங்கள் அறியாத ஆச்சரியங்கள்!
மம்மூட்டிக்கு 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

வழக்கறிஞர் டூ சூப்பர் ஸ்டார்; பத்ம பூஷன் மம்மூட்டி நீங்கள் அறியாத ஆச்சரியங்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 27, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்திய திரையுலகின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான மம்மூட்டிக்கு 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது, அவரது அரை நூற்றாண்டு கால கலை சேவைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. மம்மூட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் இருக்கிறார், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மெகாஸ்டார் என கேரளா ரசிகர்கள் பிரியத்துடன் அழைக்கும் மம்மூக்காவின் பயணத்தை பற்றி ஒரு பார்வை.

விவரங்கள்

யார் இந்த முகமது குட்டி?

மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி இஸ்மாயில். 1951 செப்டம்பர் 7-ல் ஆலப்புழாவில் பிறந்த இவர், அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர், நடிப்பின் மீது கொண்ட தீராத காதலால் திரையுலகிற்கு வந்தார். 1971-ல் 'அனுபவங்கள் பாலிச்சகள்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், 80-களின் தொடக்கத்தில்தான் அவர் ஒரு நாயகனாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். மம்மூட்டி இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை தேசிய விருதுகளையும், 7 முறை கேரளா மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். ஏற்கனவே 1998-ல் இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயணம்

தனித்துவமான திரைப்பயணம்

70 வயதை கடந்த பின்னரும் இன்றும் 'பிரம்மயுகம்', 'நண்பகல் நேரத்து மயக்கம்' எனப் புதிய சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து இளம் நடிகர்களுக்குப் போட்டியாக விளங்குகிறார். இவர் மலையாளம் தவிர தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். மம்மூட்டியின் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை, திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, "மலையாள சினிமா வரலாறு" பாடத்தின் ஒரு பகுதியாக, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியின் UG வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. "இந்த விருது எனது நாட்டிற்கு நான் செலுத்தும் நன்றிக்கடன்" எனத் தனது எக்ஸ் தளத்தில் மம்மூட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement