Loading...
வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு; ராஜமௌலியின் பிரம்மாண்டம்
வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு

வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் 'ருத்ரா' தோற்றம் வெளியீடு; ராஜமௌலியின் பிரம்மாண்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
11:58 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ருத்ரா கதாபாத்திரத்தின் புதிய அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் நடிக்கின்றனர். ஆப்பிரிக்கக் காடுகளின் பின்னணியில் கம்பீரமாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்கின்றன.

கதாப்பாத்திரம்

ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கதாபாத்திரத் தன்மை

கிலிமஞ்சாரோ மலை மற்றும் மசாய் மாரா காடுகளில் படமாக்கப்பட்ட இக்காட்சிகளில், அடர்ந்த இயற்கை நிலப்பரப்பின் நடுவே மகேஷ் பாபு கட்டுமரத்தில் அமர்ந்திருப்பது போன்றும், இயற்கையை ரசிப்பது போன்றும் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

ருத்ரா என்ற கதாபாத்திரம் சாதுரியம், மென்மை மற்றும் சீற்றம் கொண்ட ஒரு விசித்திரமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரம் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

தான் தேர்ந்தெடுக்காத விதியை சுமந்து கொண்டு, தனக்குரிய மிகப்பெரிய லட்சியத்திற்காகப் போராடும் ஒரு மனிதனாக மகேஷ் பாபு இதில் தோன்றுகிறார் என்றும், அவரது நடிப்பு பிரமிக்க வைத்துள்ளதாகவும் ராஜமௌலி புகழ்ந்துள்ளார்.

கதைக்களம்

விண்கல் அச்சுறுத்தலும் வாரணாசி கதைக்களமும்

இணையத்தில் வெளியாகியுள்ள கதைச்சுருக்கத்தின் படி, 2027 ஆம் ஆண்டில் சாம்பவி என்ற பிரம்மாண்டமான விண்கல் ஒன்று புனித நகரமான வாரணாசியை நோக்கி வந்து மோதும் அபாயம் உருவாகிறது.

உலகை அழிவிலிருந்து காப்பாற்ற பழங்கால விண்வெளி கலைப்பொருளை மீட்கும் ஆபத்தான பணியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ருத்ரா இறங்குகிறார்.

அவருக்கு உதவியாக துப்பாக்கி சுடும் வீரரான மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும், எதிரியாக கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் சுகுமாரனும் நடிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் பண்டைய ரோம் வரை கதையின் பயணக் களம் பரந்து விரிந்துள்ளது.

ADVERTISEMENT

2027 ரிலீஸ்

பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் ஏப்ரல் 2027 ரிலீஸ்

சுமார் 1,400 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் வாரணாசி திரைப்படம் முற்றிலும் ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

படத்தின் 80 சதவீதப் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள காட்சிகள் தீவிரமாகப் படமாக்கப்பட்டு வருகின்றன.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளில் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT