மஹாவதார் படம்: தீபிகா படுகோனுக்குப் பதில் 800 கோடி வசூல் நாயகி! விக்கி கௌஷலுடன் ஜோடி சேரும் 'ஸ்த்ரீ' நடிகை
செய்தி முன்னோட்டம்
தினேஷ் விஜயன் தயாரிப்பில், அமர் கௌஷிக் இயக்கத்தில் விக்கி கௌஷல் பரசுராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் மஹாவதார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அவருக்குப் பதிலாக ஷ்ரத்தா கபூர் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூர் நடித்த ஸ்த்ரீ 2 திரைப்படம் கடந்த ஆண்டு 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விக்கி - ஷ்ரத்தா
திரையில் முதல்முறை இணையும் ஜோடி
இந்தத் தகவல் உண்மையாகும்பட்சத்தில், விக்கி கௌஷல் மற்றும் ஷ்ரத்தா கபூர் இருவரும் திரையில் முதல்முறையாக ஜோடி சேர உள்ளனர். ஷ்ரத்தா கபூரின் நட்சத்திர மதிப்பும், அவரது துடிப்பான ஆளுமையும் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் அமர் கௌஷிக் கருதுகிறார். மேடாக் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஏற்கனவே ஸ்த்ரீ சீரிஸில் ஷ்ரத்தா கபூர் இணைந்து பணியாற்றியுள்ளதால், இந்தப் படத்திலும் அவர் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
படப்பிடிப்பு
படத்தின் கதை மற்றும் படப்பிடிப்பு விபரங்கள்
விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான, தர்மத்திற்காகப் போரிடும் சிரஞ்சீவி பரசுராமர் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. மஹாவதார் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 2026ல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படம் கிறிஸ்துமஸ் 2026 அல்லது 2027ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஷ்ரத்தா கபூர், லக்ஷ்மண் உடேகர் இயக்கத்தில் ஈத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நாகின் மற்றும் மஹாவதார் ஆகிய படங்களில் அவர் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த புதிய ஜோடியின் வரவு பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.