லியோ படத்தின் அப்டேட் - சிறப்பு தோற்றத்தில் அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'. இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், சாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை நெருங்கி உள்ளது என்று கூறப்படும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதலான தகவல் என்னவென்றால், இப்படம் வெளியீடு செய்யப்படுவதற்கு முன்னரே, இசை வெளியீடு, ஓடிடி உரிமம் என கிட்டத்தட்ட ரூ.350 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
லோகேஷ் கனகராஜ்-அனிருத் காம்போ மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு
'லியோ' படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ்-அனிருத் காம்போ 'விக்ரம்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இப்படத்திலும் அந்தளவுக்கு பின்னணி இசை மற்றும் பாடலின் அமைப்பு இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே தற்போது வந்துள்ள தகவலின் படி, இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அனிருத் அவர்கள் தோன்றவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.