தலைமுறை தாண்டி தொடரும் இசை பயணம்: யுவன் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையிசையின் காலத்தால் அழியாத கூட்டணியாகப் போற்றப்படும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோரின் இசைப் பாரம்பரியம், தற்போது அடுத்த தலைமுறைக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 2001-ஆம் ஆண்டு வெளியான 'நந்தா' திரைப்படத்தில் தொடங்கி 'தரமணி' வரை 16 ஆண்டுகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் 400-க்கும் அதிகமான பாடல்களை இந்தக் கூட்டணி வழங்கியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நா. முத்துக்குமார் காலமாகி 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் 'ராஜா'ஸ் பிளேலிஸ்ட்' (Raja's Playlist) திரைப்படத்தின் மூலம் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன் முத்துக்குமார் பாடலாசிரியராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்குகிறார்.
வெங்கட் பிரபு கதை
சுதா கொங்கரா தயாரிப்பில் உருவாகும் ராஜா'ஸ் பிளேலிஸ்ட்
ஒரு காலத்தில் யுவனின் இசைக்கு நா. முத்துக்குமார் தனது வரிகளால் உயிர் கொடுத்த நிலையில், இன்று அதே யுவனின் இசையில் அவரது மகன் ஆதவன் முதல் பாடலை எழுதுவது இசை ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலிபன்ட்டைன் எக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கும் இப்படத்தை சுஜித் என். சுப்ரமணியம் இயக்குகிறார்.
இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்ற, வெங்கட் பிரபு கதையை எழுதியுள்ளார்.
ஜெயன், சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் மூலம், தேசிய விருது வென்ற தந்தையைப் போலவே ஆதவனும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.