
மோகன்லாலுக்கு அனைத்தும் தெரியும்; எம்புரான் சர்ச்சையில் பிரித்விராஜை பலிக்கடாவாக்க முயல்வதாக தாயார் பரபரப்பு அறிக்கை
செய்தி முன்னோட்டம்
குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக எல்2 எம்புரான் திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டு மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரனின் தாயாரான மூத்த நடிகை மல்லிகா சுகுமாரன் மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
தனது மகன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலையோ அல்லது படத்தின் தயாரிப்பாளர்களையோ தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் கூற்றுகளை நிராகரித்து பேஸ்புக்க்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர், முழு குழுவும் ஸ்கிரிப்ட் மற்றும் அதன் கதை பற்றி அறிந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மோகன்லாலும் எழுத்தாளர் முரளி கோபியும் அனைத்தையும் அறிந்திருந்ததாகவும் மல்லிகா கூறியுள்ளார்.
மேலும், பின்னடைவுக்கு மத்தியில் பிரித்விராஜை பலியாடாக மாற்ற முயற்சிப்பவர்களை அவர் விமர்சித்து, படத்தில் உள்ளவற்றுக்கு அனைவருமே கூட்டுப் பொறுப்பு என்று கூறினார்.
சர்ச்சை
அரசியல் சர்ச்சை
குஜராத் கலவரத்தை சித்தரிப்பதில் இருந்து, குறிப்பாக இந்து தீவிரவாதியாக இருந்து அரசியல்வாதியான பாபா பஜ்ரங்கியை சித்தரிப்பதில் இருந்து இந்த சர்ச்சை உருவாகிறது.
மேலும் பஜ்ரங்கி என்பது அனுமனைக் குறிக்கிறது என்பதால், அது மற்றொரு சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
படம் உண்மைகளைத் திரிப்பதாக வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அதைப் பாராட்டியுள்ளனர்.
எனினும், நடிகர் மோகன்லாலின் ரசிகர்கள் பலருமே இந்த காட்சிகளால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மோகன்லால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, சில காட்சிகள் பார்வையாளர்களை புண்படுத்தியதாக ஒப்புக்கொண்டதோடு, அவை நீக்கப்படும் என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.