உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கூடு: 35 நாட்கள் மின்சாரமின்றி வாழ்ந்த கிராமத்தின் கதை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் நடைபெற்ற நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கூடு என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் விஜே கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரக்ஷிதா மகாலட்சுமி மற்றும் நமோ நாராயணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
மனிதநேயம்
பறவைக்காக மின்சாரத்தைத் துண்டித்த கிராம மக்கள்
இத்திரைப்படத்தின் கதைக்களம் குறித்துப் படக்குழு வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த மிக உணர்வுப்பூர்வமான சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊரின் மின்மாற்றிக்குள் அரிய வகைப் பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிடுகிறது.
அந்தக் கூட்டையும் அதிலுள்ள குஞ்சுகளையும் பாதுகாக்க வேண்டிய சூழலில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் தியாகம் செய்கின்றனர்.
சமூக ஒற்றுமையின் மகத்துவத்தையும், கூட்டாக வெளிப்படும் மனிதநேயத்தின் வலிமையையும் இப்படம் அழுத்தமாக எடுத்துரைக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.