இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
1928-ல் வெளியான 'விகிதகுமாரன்' என்ற படத்தின் மூலம், மலையாளத் திரையுலகின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான், P.K.ரோஸி. அவரின் 120வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில், இன்றைய கூகுள் டூடுல் அவரின் படத்தை வெளியிட்டுள்ளது ரோஸியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்: பிப்ரவரி 10, 1903 -இல் கேரளாவின் திருவனந்தபுரத்தில், ராஜம்மாவாக பிறந்தார், ரோஸி. பெற்றோர்கள் இருவரும் தினக்கூலிகள். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ரோஸி. 'கக்கரிசி' நாடகங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார் ரோஸி. இது ஒரு வகை நாட்டுப்புற நாடகமாகும். எனினும் அவர், தலித் கிறிஸ்தவர்களின் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தொழிலில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவரது முதல் படமான விகதகுமாரனில், ரோஸி ஒரு உயர்சாதி நாயர் பெண்ணாக நடித்தார்.
கடும் எதிர்ப்புகளை சந்தித்த ரோஸி
ஆனால், ஒரு தலித் பெண், நாயர் கதாபாத்திரத்தில் நடித்ததை ஏற்று கொள்ள முடியாத மக்களிடம் இருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். திருவனந்தபுரம் Capital திரையரங்கில் முதல் நாள் ஷோவிற்கு, கலந்து கொள்ள சென்ற ரோஸியின் மீது, பார்வையாளர்கள் கற்களை வீசினர். தொடர்ந்து அவரது வீடும் ஹிந்து மத வெறியர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, படத்தயாரிப்பாளர் டேனியல் திவாலானார், படத்தின் நகலும் கிடைக்கவில்லை. பின்னர், ரோஸி ஒரு டிரக் டிரைவரை மணந்து, நடிப்பு தொழிலை கைவிட்டுவிட்டார். திருமணத்திற்குப் பிறகு, ரோஸி தமிழ்நாட்டுக்கு வந்து "ராஜம்மாள்" என்ற பெயரில் வாழ்ந்ததாகவும், அவரின் நடிப்பு வாழ்க்கை பற்றி குழந்தைகளிடம் கூட அவர் சொல்லவில்லை என கூறப்படுகிறது.