Loading...
10 ஆண்டுகளுக்குப் பின் டொராண்டோ விழாவில் தமிழ் படம்! Standing Ovation பெற்ற கீர்த்தி சுரேஷின் 'டோரதி'
எழுந்து நின்று கைதட்டல் பெற்ற கீர்த்தி சுரேஷின் 'டோரதி'

10 ஆண்டுகளுக்குப் பின் டொராண்டோ விழாவில் தமிழ் படம்! Standing Ovation பெற்ற கீர்த்தி சுரேஷின் 'டோரதி'

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
04:22 pm

செய்தி முன்னோட்டம்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி (Dorothy) தமிழ் திரைப்படம், கனடாவில் நடைபெற்று வரும் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (TIFF 2026) உலகளவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மதிப்புமிக்கத் திரைப்பட விழாவில் பிரதானப் பிரிவில் திரையிடப்பட்ட முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை டோரதி பெற்றுள்ளது. ஸ்கோடியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இந்தத் திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் தயாரிப்பாளர்கள் குனீத் மோங்கா கபூர், அசின் ஜெயின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரவேற்பு

ரசிகர்களின் வரவேற்பும் படக் கருப்பொருளும்

திரைப்படம் திரையிடப்பட்டு முடிந்ததும் அரங்கில் இருந்த சர்வதேச ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று பல நிமிடங்கள் தொடர்ச்சியாகக் கைதட்டி (Standing Ovation) தங்களது நெகிழ்ச்சியான வரவேற்பைப் பதிவு செய்தனர்.

நட்பு, தனி மனித அடையாளம், சமுதாயப் பாரபட்சங்கள் மற்றும் மனித உறவுகளின் ஆழமானப் பிணைப்புகளை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதைக் களம் தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றியிருந்தாலும், அது பேசும் உணர்வுகள் உலகளாவிய ரசிகர்களுக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இசை

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை

டோரதி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்திற்காக இளையராஜா அமைத்துள்ள பின்னணி இசையும் பாடல்களும் ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

கல்யாண விருந்து மற்றும் முத்துமணி ஆகிய பாடல்கள் யூடியூப்பில் தலா 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தன.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நேரலை இசை நிகழ்ச்சியில் சுமார் 40 நிமிடங்கள் இடைவிடாமல் இப்படத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டு ரசிகர்களைப் பரவசப்படுத்தின.

ADVERTISEMENT

வெளியீடு 

திரையரங்கு வெளியீடு மற்றும் தயாரிப்பு விவரங்கள்

ஜாங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர், தி லஞ்ச்பாக்ஸ் மற்றும் கில் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற படங்களைத் தயாரித்த குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

டொராண்டோ விழாவில் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்தைத் தொடர்ந்து, டோரதி திரைப்படம் வரும் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் சர்வதேச வெற்றி தமிழ் சினிமாவிற்கு புதிய பெருமையை சேர்த்துள்ளது.

ADVERTISEMENT