சிவகார்த்திகேயன் புதிய படத்தின் கதாநாயகி: 'பார்க்கிங்' இயக்குநர் படத்தில் கயாடு லோஹர்!
செய்தி முன்னோட்டம்
பார்க்கிங் படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரபல நடிகை கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் சிலம்பரசனின் (சிம்பு) 49-வது திரைப்படத்தை இயக்குவதாகத் திட்டமிடப்பட்டு, அதில் கதாநாயகியாக கயாடு லோஹரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அந்த திரைப்படத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, அதே சுவாரஸ்யமான கதைக் களத்தில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடி யார்?
நாயகியாக தொடரும் கயாடு
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.
இதற்கான முன் தயாரிப்பு பணிகள் சமீபத்தில் முறைப்படி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த கதைக் களத்திற்கு கயாடு லோஹரின் நடிப்பு மிகச்சரியாகப் பொருந்தும் என இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நம்புவதால், சிவகார்த்திகேயனுக்கும் அவரையே ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
டிராகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கயாடு லோஹர், தற்போது சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.