கவின் படத்தில் இணையும் லப்பர் பந்து ஹீரோயின்! கமல்ஹாசனின் மாஸ் பட டைட்டிலோடு கோலாகலமாகத் தொடங்கிய பூஜை
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பழைய கிளாசிக் படங்களின் தலைப்புகளை புதிய படங்களுக்கு வைக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது இளம் நடிகர் கவினின் அடுத்த புதிய திரைப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பட தலைப்பான பேர் சொல்லும் பிள்ளை சூட்டப்பட்டுள்ளது. தண்டட்டி திரைப்படத்தை இயக்கி விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் ராம் சங்கையா இயக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லப்பர் பந்து
கவினுக்கு ஜோடியாகும் லப்பர் பந்து சஞ்சனா
கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியின் தக் லைஃப் உள்ளிட்ட பெரிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், லப்பர் பந்து வெற்றிக்குக் பிறகு மிகவும் கவனமாக கதைகளைத் தேர்வு செய்து வந்தார். தற்பொழுது பேர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக நடிகர் கவினுக்கு ஜோடியாக சஞ்சனா கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் பால சரவணனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டைட்டில் பின்னணி
1987 கமல் பட டைட்டில் பின்னணி
கடந்த 1987 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், கே.ஆர். விஜயா, ராதிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படத்தின் பெயர் தான் பேர் சொல்லும் பிள்ளை. அந்தப் பழைய சென்டிமென்ட் டைட்டிலைப் பிடித்துள்ள கவினின் இந்தப் புதிய படமும் ஒரு அழகான குடும்பக் கதையாகவோ அல்லது கிராமத்து பின்னணி கொண்ட வாழ்வியலாகவோ இருக்க அதிக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கம்பேக்
கம்பேக் கொடுப்பாரா நடிகர் கவின்?
நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கவின் இணைந்து நடித்துள்ள ஹாய் திரைப்படம் தற்பொழுது ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், கவின் தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொய்வின்றித் தொடங்கியுள்ளார். டாடா மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு, கவின் நடிப்பில் வெளியான கிஸ் மற்றும் மாஸ்க் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்குப் பாக்ஸ் ஆபீசில் வசூலை ஈட்டவில்லை. எனவே, இயக்குனர் ராம் சங்கையாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த பேர் சொல்லும் பிள்ளை திரைப்படம் நடிகர் கவினுக்கு ஒரு வலுவான கம்பேக் படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.