திருநங்கைகள் குறித்து கருத்து: மோகன் ஜி பேச்சுக்கு கார்த்திக் சுப்பராஜ் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
திருநங்கைகளை மையப்படுத்தி வெளியாகி வெற்றிபெற்றுள்ள டோரதி திரைப்படத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக விவாதத்தில், இயக்குநர் மோகன் ஜி திருநங்கைகள் குறித்துப் பேசிய விதம் அருவருக்கத்தக்கது என்றும், அது உளவியல் ரீதியான வன்முறை என்றும் பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். பொதுவெளியில் விவாதங்கள் என்ற பெயரில் குறிப்பிட்ட பாலினத்தவர் மீது வன்மத்தையும் வெறுப்புணர்வையும் கக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தனது வீடியோ பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஊடக விவாதம்
மோகன் ஜியின் சர்ச்சைக் கேள்வி
டோரதி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவைச் சேர்ந்த நேகா என்ற திருநங்கையிடம் ஊடக விவாதம் ஒன்றில் இயக்குநர் மோகன் ஜி கேள்வி எழுப்பினார்.
அதில், "திருமணம் செய்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்க, ஒரு ஆணும் திருநங்கையும் பரஸ்பரம் துணையாக இருந்து சந்தோஷமாக வாழ்வார்கள்" என்று விளக்கமளித்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்து "சந்தோஷம் என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?" எனத் திரும்பத் திரும்பக் கேட்டு, இயற்கையான தாம்பத்தியம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை மையப்படுத்தி அவரை அவமரியாதை செய்யும் நோக்கில் மோகன் ஜி அழுத்தம் கொடுத்ததாகக் கார்த்திக் சுப்பராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டனம்
கார்த்திக் சுப்பராஜ் பதிலடி
இதுகுறித்து வேதனையுடன் பேசிய கார்த்திக் சுப்பராஜ், "டோரதி படத்தை என்ன வேண்டுமானாலும் விமர்சியுங்கள், அதை நான் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் மனிதாபிமானம் என்று ஒன்று உள்ளது".
"திருமணம் செய்து, உடலுறவு வைத்து, குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும்தான் மனித வாழ்க்கையின் இலக்கா? விலங்குகள் கூடத்தான் அதைச் செய்கின்றன".
"சாதாரண மனிதர்களாக இருப்பவர்களில்கூட எத்தனையோ பேரால் குழந்தை பெற முடியாமல் போகிறது".
"அதற்காக அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவார்களா? பாலினப் பாகுபாடு காட்டி ஒருவரைப் பொதுவெளியில் தாக்கிப் பேசுவது மிகத் தவறானது".
"இதுபோன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I Strongly Condemn.... pic.twitter.com/u8n6StgXpg
— karthik subbaraj (@karthiksubbaraj) October 13, 2026