#கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது
நடிகர் கார்த்தி தனது 27வது திரைப்படத்திற்காக, 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாருடன் கைகோர்த்துள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்ற நிலையில், பட பூஜை புகைப்படங்கள் மற்றும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை முடிந்ததை முன்னிட்டு, அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதாநாயகி குறித்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், இப்படத்தை கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் 25,26வது திரைப்படங்கள்
கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள ஆக்சன் திரில்லர் படத்தில், கார்த்தி தங்கக் கடத்தலில் ஈடுபடும் நபராக நடித்துள்ளார். மேலும், இது திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி படமாக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. கார்த்தியின் 26வது திரைப்படத்திற்கு, சூது கவ்வும் இயக்குனர் நளன் குமாரசாமி உடன் இணைந்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படாத நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.