நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 26, 2024 அன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படம், இந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய புராஜெக்ட்களில் ஒன்றாக மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ள வரலாற்றுப் படமான கங்குவா திரைப்படம் ₹350 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சமீபத்திய தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இதன் படப்பிடிப்பு ஏழு நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் 10,000க்கும் மேற்பட்டோர் இடம்பெற்ற படப்பிடிப்பு திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய போர் காட்சிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்குவா ஆடியோ லாஞ்ச்
வேட்டையன் படத்திற்காக ரிலீஸ் ஒத்திவைப்பு
முன்னதாக, இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 10 அன்று வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான வேட்டையன் படமும் அதே தேதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அறிவித்தனர். படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த எந்த தகவலும் அப்போது வெளியிடப்படாத நிலையில், தற்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை நவம்பர் 14 அன்று திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முதற்கட்டமாக 10மொழிகளிலும், பின்னர் பல்வேறு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.