LOADING...
ஜன நாயகன் vs சென்சார் போர்டு விவகாரம்: வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
'ஜன நாயகன்' வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜன நாயகன் vs சென்சார் போர்டு விவகாரம்: வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
05:12 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' வெளியீட்டில் நீடித்து வரும் தணிக்கை சிக்கல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அடங்கிய அமர்வு இன்று நீண்ட விசாரணைக்கு பிறகு தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், தணிக்கைக் குழு (CBFC) மற்றும் படக்குழு தரப்பில் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தணிக்கை குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராணுவத்தைச் சித்தரிக்கும் காட்சிகளில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அது குறித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வுக் குழுவிற்குப் படம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்" வாதிட்டார்.

இழுபறி

தொடர்ந்து இழுபறியில் படத்தின் வெளியீடு

இதற்கு பதிலளித்த படக்குழுவின் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "புகார்தாரர் கோரிய அனைத்து வெட்டுக்களும் (Cuts) ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன. 22 நாடுகளில் படத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள ஒரு படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்" என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இதனால் ஜனவரி 23-ஆம் தேதி படம் வெளியாகுமா என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

Advertisement