'ஜன நாயகன்' படத்திற்கு இங்கிலாந்து தணிக்கை குழு சான்றிதழ்: அதன் அர்த்தம் என்ன?
செய்தி முன்னோட்டம்
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இங்கிலாந்து தணிக்கை குழு (UK BBFC) இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் தணிக்கை வாரியம், ஜன நாயகன் படத்திற்கு '15' சான்றிதழ் அளித்துள்ளது. அதாவது 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும். இளையவர்கள் யாரும் அதை திரையரங்கில் பார்க்கவோ அல்லது வாடகைக்கு/வாங்கவோ அனுமதியில்லை. படத்தில் வன்முறை காட்சிகள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடுமையான வார்த்தைகள் இருப்பதால் இந்த வகைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் தணிக்கை வாரியம்(CBFC) இன்னும் படத்திற்கு சான்றிதழ் வழங்காததால், படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வழக்கு
தணிக்கை சான்றிதழ் குறித்து இன்று விசாரணை
ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாக வேண்டியிருப்பதால், தணிக்கைச் சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் எனப் படத்தயாரிப்பாளர்கள் வாதிட்டனர். இதற்குப் பதிலளித்த தணிக்கை வாரியம், முறைப்படி சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு, சான்றிதழ் கிடைக்காவிட்டால், பட வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் எனவும் நேற்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இன்று மாலை வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் KVN நிறுவனம் தயாரித்து, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் வெளியீடு திட்டமிட்டபடி நடக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.