புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு
2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம் ஆகும். இந்த படத்தை டி. செ. ஞானவேல் அவர்கள் இயக்கியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ராஜீஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 1993-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். செங்கேணி மாற்றும் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினருக்கு உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளை இந்த படம் எடுத்துக் காட்டுகிறது. இந்த படம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து பெரும் வெற்றியை கண்டது. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெய்பீம் புத்தகத்தை பற்றி ட்விட்டரில் பதிவு
இந்தப் படம் 'கல்வி ஒன்று மட்டுமே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி' என்ற அம்பேத்காரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டப் படமாகும். இப்படத்தின் இயக்குனர் சர்வதேச திரைப்பட விழாவின் போது கூறியதாவது; "ஜெய்பீம் என்பது வெறும் வார்த்தை அல்ல.அது ஒரு உணர்வாகும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக டாக்டர் அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட சொல்லாகும். ஜெய்பீம் படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்து கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்தேன்" என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் உரையாடலுடன் இப்படத்தின் திரைக்கதை, புத்தகமாக வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை 2D எண்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.