பிறந்தநாள் ஸ்பெஷல்: 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபுதேவாவின் 50வது பிறந்த நாள்
'மாஸ்டர். பிரபு' என விடலை பருவத்தில் தனது திரைவாழ்க்கையை துவங்கிய பிரபுதேவா, இரண்டே படங்களில் 'பிரபு மாஸ்டர்' என்ற அந்தஸ்தை பெற்றார்! தன்னுடைய மின்னல் வேக அசைவுகளாலும், ரப்பர் போல வளையும் நடந்தாலும், 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என புகழப்பட்டார். பிரபுதேவாவின் இயற்பெயர், சன்னமல்லிகார்ஜுனா. இவரின் தந்தை பிரபல நடன இயக்குனர் சுந்தரம் மாஸ்டர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரின் அண்ணன் ராஜு சுந்தரம். மௌன ராகம் படத்தில், 'பனி விழும் இரவு' பாடலில், புல்லாங்குழல் ஊதும் சிறுவனாக தனது திரைப்பயணத்தை தொடங்கினர் பிரபுதேவா. அதன் பின்னர், ஒரு சில படங்களில் பின்னணி நடன கலைஞராக தோன்றியவர், முதன் முதலில், கமலின் வெற்றிவிழா என்ற திரைப்படத்தில் தான் நடன இயக்குனராக அறிமுகம் ஆனார்.
நடிகர் பிரபுதேவா டு இயக்குனர் பிரபுதேவா
தான் நடனம் அமைக்கும் பாடலில், சிறப்பு தோற்றத்தில் தோன்றிய பிரபுதேவா, நடிகனாக அறிமுகமானது, 'இந்து' திரைப்படத்தில் தான். எனினும், 'காதலன்' படம் தான், அவர் வாழ்க்கையில் திருப்புமுனை தந்த படம் எனலாம். இன்றளவும், ஊர்வசி ஊர்வசி பாடலும், முக்காபுலா பாடலும் பிரபலமாக இருப்பதற்கு காரணம், பிரபுதேவாவின் நடனமும் தான். அந்த படத்தில் இருந்துதான், நடிகர் வடிவேலுவுடன், பிரபுதேவா காம்போ தொடங்கியது. இவர், தனது சகோதரர்களுடன் '123' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் பணிபுரிந்த பிரபுதேவா, தெலுங்கு படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். சூப்பர்டூப்பர் ஹிட் ஆனா அந்த திரைப்படத்தை, இதுவரை 7 மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர். தமிழில் இதுவரை 4 படங்களை இயக்கியுள்ளார், 3 படங்களை தயாரித்துள்ளார்.