தமிழக முதல்வர் விஜய் உடனான ஒப்பீட்டு வீடியோக்களுக்கு ஜேசன் சஞ்சய் பதில்
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சரும் நடிகருமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் வெளியான 'சிக்மா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். தமன் இசையமைப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், பேயர்லி மானேவுடன் கலந்துகொண்ட விளம்பர நேர்காணலில் ஜேசன் சஞ்சய் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, சமூக வலைதளங்களில் தனது முகபாவனைகளையும் தமிழக முதல்வர் விஜய்யின் முகபாவனைகளையும் ஒப்பிட்டு உருவாக்கப்படும் எடிட் வீடியோக்கள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு, "இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டேன்; ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை" எனப் பதிலளித்தார்.
தந்தையை வைத்து படம்
முதல்வர் விஜய் வைத்து படம் இயக்கினால் என்ன கதை?
எதிர்காலத்தில் தனது தந்தையான முதலமைச்சர் விஜய்யை வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எத்தகைய கதையைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு ஜேசன் சஞ்சய் பதிலளித்தார்.
அப்போது, தனது தந்தையின் கலகலப்பான மற்றும் அப்பாவித்தனமான முகத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு கதையை இயக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் ஏற்கனவே பல படங்களில் இந்தத் தன்மையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரும் ரசிக்கும்படியான எளிய காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாக அதை உருவாக்க விரும்புவதாகக் கூறினார்.
படத்தின் வசூல் நிலவரம்
தொலைபேசி உரையாடல்
பொதுவெளியைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் தமிழக முதல்வர் விஜய் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் என்று குறிப்பிட்ட ஜேசன் சஞ்சய், கேள்விகளுக்கு உடனே பதிலளிக்காமல் சில வினாடிகள் யோசித்த பின்னரே பேசுவார் என்றார்.
போனில் பேசும்போது கூட சில நொடிகள் அமைதியாக இருப்பதைப் பார்த்து இணைப்பைத் துண்டித்துவிட்டாரா எனத் தான் கேட்பதுண்டு என்று குறிப்பிட்ட அவர், 'சிக்மா' படத்தைப் பார்த்துவிட்டு தந்தை நிச்சயம் பெருமைப்படுவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இதனிடையே, 'யு/ஏ' சான்றிதழுடன் வெளியான 'சிக்மா' திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் 1,813 காட்சிகளுடன் ரூ.2.35 கோடி நிகர வசூலையும் ஈட்டியுள்ளது.