ஆஸ்கர் விருது போட்டியில் இளையராஜாவின் மற்றுமொரு படம்! தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்தோனி திரைப்படம்; உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா?
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள அந்தோனி என்ற இலங்கைத் தமிழ் திரைப்படம் 2027 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கைத் திரைப்படக் கூட்டுஸ்தாபனத்தின் மூலம் சிறந்த சர்வதேசத் திரைப்படம் என்ற பிரிவின்கீழ் இத்திரைப்படம் ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இளையராஜாவின் இசை வரலாற்றில் இடம்பெற்ற முதல் இலங்கைத் தமிழ்ப் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்பயணம்
பண்ணைபுரத்தில் தொடங்கி லண்டன் சிம்பொனி வரையிலான இசைப்பயணம்
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, 1976-இல் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
கடந்த 50 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களில் 7000-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து உலகப் புகழ் பெற்றுள்ளார்.
ஐந்து முறை தேசிய விருது பெற்ற இவர், பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளையும் வென்றுள்ளார்.
லண்டனில் சிம்பொனி அமைத்ததுடன், திருவாசகத்திற்கும் சிம்பொனி இசை அமைத்து இசை உலகில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.
வரவேற்பு
திரையரங்குகள் மற்றும் முன்னணி ஓடிடி தளங்களில் பிரமாண்ட வரவேற்பு
ஓசை பிலிம்ஸ் சார்பில் சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
கயல் வின்சன்ட், டி.ஜே.பானு, சுதர்சன் ரவீந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது அமேசான் பிரைம் வீடியோ, ஷார்ட்ஃபிலிக்ஸ், டென்ட்கொட்டா மற்றும் ரூபஹாலா போன்ற பிரபல ஓடிடி தளங்களிலும் வெளியாகி மக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
உலகளாவிய அங்கீகாரம்
உலகளாவிய அங்கீகாரத்தை எதிர்நோக்கும் முதல் இலங்கைத் தமிழ்ப் படம்
ஏற்கனவே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் வெளியான தேவர் மகன் மற்றும் ஹே ராம் ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்துகொண்டன.
அந்த வரிசையில் தற்போது இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படமான அந்தோனி ஆஸ்கர் போட்டியில் பங்கேற்பதால், உலகளவில் தமிழ் சினிமாவிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் இசைப் பிரியர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, இளையராஜா இசையில் மராத்தியில் வெளியான கோந்தல் திரைப்படமும் இந்தியா சார்பாக சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பிரிவில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.