LOADING...
'துரந்தர்' படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு
இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பலோச்' (Baloch) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது

'துரந்தர்' படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2026
04:25 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த 'துரந்தர்' திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது. எனினும், திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் அதில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது மத்திய அரசு. பரிந்துரைப்பின் பேரில், சில மாற்றங்களுடன் இன்று (ஜனவரி 1, 2026) முதல் 'துரந்தர்' திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவகாரம்

என்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளது மத்திய அரசு?

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (I&B Ministry) அளித்த அறிவுறுத்தலின்படி, படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை 'மியூட்' (Mute) செய்ய படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பலோச்' (Baloch) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் ஒரு முக்கிய வசனத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு (டிசம்பர் 31) நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு புதிய பதிப்புகள் (DCP) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ரசிகர்கள் பார்ப்பது இந்த மாற்றியமைக்கப்பட்ட பதிப்பையே.

வசூல் வேட்டை

பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத சாதனை

சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், 'துரந்தர்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத சாதனைகளைப் படைத்து வருகிறது. ரிலீஸான 27 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 1,128 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் சாதனையை முறியடிப்பதில் இப்படம் முனைப்புடன் உள்ளது. 2025-ம் ஆண்டில் வெளியான இந்திப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்துள்ளது. ரன்வீர் சிங்கின் மிரட்டலான நடிப்பு மற்றும் தேசப்பற்று சார்ந்த கதைக்களம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், இந்தச் சிறு மாற்றங்கள் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காது எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement