"அதனால்தான் என் வீட்டில் தனியாக நடத்தினேன்!" - தர்மேந்திரா மறைவு விவகாரத்தில் ஹேமா மாலினி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் மறைவை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் இரண்டு வெவ்வேறு இடங்களில் நினைவஞ்சலி கூட்டங்களை நடத்தியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகையும், தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியுமான நடிகை ஹேமா மாலினி தற்போது மௌனம் கலைத்துள்ளார். கடந்த வாரத்தில், நடிகர் தர்மேந்திரா காலமானதை தொடர்ந்து, அவரது முதல் மனைவி பிரகாஷ் கவுர் மற்றும் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் ஒரு இடத்திலும், ஹேமா மாலினி மற்றும் அவரது மகள்கள் ஈஷா தியோல், அஹானா தியோல் ஆகியோர் மற்றொரு இடத்திலும் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தினர்.
விளக்கம்
தனித்தனியாக பூஜை நடைபெற்றது குறித்து ஹேமா மாலினி அளித்த விளக்கம்
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ஹேமா மாலினி கூறியதாவது, "தர்மேந்திராவின் முதல் குடும்பத்தினருக்கும் எங்களுக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்தது உண்மைதான். அவர்களின் குடும்பச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை." "அவருடன் நான் வாழ்ந்த நினைவுகள் மிக அழகானவை. எனது மகள்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து அவருக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த விரும்பினேன். அதனால்தான் எனது இல்லத்தில் தனியாகப் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன்." "ஒரே இடத்தில் கூடினால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும் என்பதை இரு தரப்புமே உணர்ந்திருந்தோம். ஆனால், அவர் மீதான அன்பு இரு குடும்பத்தினருக்கும் ஒன்றுதான். அவரை கௌரவிப்பதே எங்களின் நோக்கம்," எனத் தெரிவித்துள்ளார்.