இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள்
நடிகை த்ரிஷாவிற்கு இன்று 40 வது பிறந்தநாள்! மிஸ்.சென்னையாக 1999-இல் முடிசூட்டி கொண்டவர், இன்று வரை குன்றா இளமையுடன், படத்திற்கு படம் தேர்ந்த நடிப்புடன், இளைஞர்களின் கனவுகன்னியாகவே வலம் வருகிறார். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர் த்ரிஷா. அவரின் தேர்ந்த நடிப்பில், பிரபலமான கதாபாத்திரங்களை பற்றி ஒரு சிறு குறிப்பு. தனலட்சுமி, கில்லி: தரணி இயக்கத்தில் உருவான இந்த வெற்றி திரைப்படம், இன்று வரை பிரபலம். நடிகர் விஜய், பிரகாஷ் ராஜ் இருவரின் சினிமா வாழ்க்கையிலும் கூட இந்த படம் ஒரு மைல்கல். 'தனலட்சுமி' என்ற கேரக்டரில் ஒரு சாதுவான பெண்ணாக நடித்திருப்பார் த்ரிஷா.
ஜெஸ்ஸி முதல் ஜானு வரை
ஜெஸ்ஸி, விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஒரு கிளாசிக் திரைப்படம் இது. சிம்புவுடன் இவரின் கெமிஸ்ட்ரி இன்று வரை பேசப்படுகிறது. மலையாள கிறிஸ்தவ பெண்ணாக, ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைக்கதையை இவரை சுற்றிதான் பின்னப்பட்டிருக்கும். அபி, அபியும் நானும்: ஒரு தந்தையும் மகளுக்குமான அற்புதமான உறவை பற்றி பேசும் திரைப்படம். ராதாமோகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், அப்பாவாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். அவரின் பெண்ணாக 'அபி' என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். ஜானு, 96: பள்ளிப்பருவ காதலர்களின் மென்மையான காதல் பற்றி பேசும் படம். 'ஜானு' கதாபாத்திரத்தில் த்ரிஷாவும், 'ராம்' கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருப்பார்கள். த்ரிஷாவின் கதாபாத்திரம் மட்டுமல்ல, இந்த படத்தில் அவர் பயன்படுத்திய சல்வாரும் பிரபலமானது.