தமன்னாவின் பிறந்தநாள்: 15 வயதிலேயே திரையுலகிற்கு வந்த நடிகை தமன்னா பற்றிய சுவாரசிய தகவலுடன்..!
தென் இந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. அவரின் பிறந்த நாளான இன்று அனைத்து ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் ட்விட்டரில் வாழ்த்தினை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் நாமும் அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை சொல்லி, அவரை பற்றிய சுவாரசிய தகவலோடு, அவர் நடித்த படங்களை பற்றியும் பார்ப்போம். டிசம்பர் 21, 1988 இல் பிறந்த தமன்னாக்கு தற்போது 33 வயதாகிறது. ஆனால் அவர் தனது பதினைந்தாவது வயதிலேயே திரையுலகில் அடியெடுத்து வைத்து விட்டார். 2005 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான "சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் தெலுங்கு திரைப்படமான "ஸ்ரீ" இல் தமன்னா நடிக்க தொடங்கி, தென் இந்திய திரையுலகத்திற்கும் அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் நடிகை தமன்னாவின் தொடர் சாதனைகள்
2006-ல் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் முதல் சில படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நடித்த ஹாப்பி டேஸ் மற்றும் கல்லூரி போன்ற படங்கள் இவர் தென் இந்தியாவில் வேரூன்ற உதவியாக இருந்தன. இதன் பிறகு படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இதன் பிறகு பிரமாண்ட படைப்பாக உருவான பாகுபலி கதையில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படம் அதிக வசூல் சாதனை இந்திய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ரசிகர்களோடு சேர்ந்து நாமும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.