ஹாலிவுட்டின் மெகா திருவிழா! கோல்டன் குளோப் 2026 விருதுகள்; இந்தியாவில் நேரலையில் பார்ப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கோல்டன் குளோப் (Golden Globe Awards 2026) விருது விழா, இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி ஜனவரி 11 ஆம் தேதி இரவு இந்த விழா தொடங்குகிறது. இந்திய நேரப்படி, திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை 6:30 மணிக்கு இந்த விருது வழங்கும் விழா நேரலையாக ஒளிபரப்பப்படும். அதற்கு முன்னதாக, நட்சத்திரங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு அதிகாலை 5:00 மணி முதலே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிபரப்பு
எங்கே பார்க்கலாம்?
இந்தியாவில் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் இந்த விழாவை Lionsgate Play என்ற ஓடிடி தளத்தில் நேரலையாகக் காணலாம். இது தவிர, சிபிஎஸ் நியூஸ் மற்றும் எண்டெர்டைன்மென்ட் டுநைட் ஆகிய யூடியூப் சேனல்களில் விழாவின் முக்கியப் பகுதிகள் மற்றும் நேரலை நிகழ்வுகளைப் பார்க்க முடியும். அமெரிக்காவில் சிபிஎஸ் தொலைக்காட்சி மற்றும் பாராமவுண்ட்+ தளத்தில் இது ஒளிபரப்பாகிறது. பிரபல நகைச்சுவை நடிகை நிக்கி கிளாசர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விழாவைத் தொகுத்து வழங்குகிறார். இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, உலக நாயகி பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஜார்ஜ் குளூனி மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு விருதை வழங்க மேடை ஏற உள்ளார்.