
தொடர்ந்து விருதுகளை குவித்து வரும் மாமனிதன் படம்; நடிகை காயத்ரிக்கு விருது
செய்தி முன்னோட்டம்
கடந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'மாமனிதன்.' இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
விஜய் சேதுபதி, சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரின் கூட்டணியில் ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்கள் வந்துள்ளன.
இப்படம் இவர்கள் மூவரும் இணையும் உருவாக்கிய 4-வது படமாகும். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகை காயத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விருதுகள்
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன்
2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
பல்வேறு விருது விழாக்களில் பங்கேற்ற இந்த படம் சில விருதுகளை பெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் 3 விருதுகளை பெற்றது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடந்த டூருக் (druk) சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் 4 பிரிவுகளில் விருதுகளை பெற்றது.
ஈரான் நாட்டிலுள்ள அபதான் தீவில் நடைபெற்ற மூவிங் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை விஜய் சேதுபதி பெற்றார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைகான விருதினை இப்படத்தின் கதாநாயகியான காயத்ரிக்கு கிடைத்துள்ளது.