ஹாப்பி பர்த்டே விக்ரமன்! உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படங்களை தந்த இயக்குனரின் பிறந்தநாள்!
உறவுகளின் முக்கியத்துவத்தையும், அதன் வலிமையையும் பற்றி ஒருவர் படம் எடுப்பதாக இருந்தால், அவர் நிச்சயம் விக்ரமன் படங்களை ரெபெரென்ஸ் வைத்து தான் எடுக்க வேண்டும். அப்படி, மனித உறவுகளை பற்றி பேசும் பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் விக்ரமன். இன்று அவரின் பிறந்தநாள். காதல், விரோதம், தீவிரவாதம் என டெம்ப்லேட்டாக படங்கள் வெளியான 90'களின் கால கட்டத்தில், 'குடும்பத்தினர் அனைவருக்குமான பட'மாக வந்தது தான் விக்ரமன் படங்கள். தென்காசி மாவட்டத்தில் பிறந்த விக்ரமன், இயக்குனர் பார்த்திபனின் அசிஸ்டன்ட். பார்த்திபனுடன் 'புதிய பாதை'யில் தொடங்கிய பயணம், இவரின் 'புது வசந்தம்' மூலம் வெற்றியடைந்தது. 'புது வசந்தம்' திரைப்படத்தில், அறிமுகம் இல்லாத 4 ஆண்களுக்கும், 1 பெண்ணிற்கும் இடையே உண்டாகும் நட்பை அழகாக சித்தரித்திருப்பார்.
நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த 'பூவே உனக்காக'
விஜய், சூர்யா என பலருக்கும், சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை தந்தது விக்ரமன் படங்களே. 'சூரியவம்சம்' படத்தில் இருந்து தான், ஒரே பாடலில் ஹீரோ உழைத்து பெரிய பணக்காரர் ஆவதன் ட்ரெண்ட் துவங்கியது. காதலித்த பெண்ணிற்காக, தன் காதலை தியாகம் செய்யும் இளைஞன் கதாபாத்திரத்தில் 'பூவே உனக்காக' விஜய் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை. விக்ரமன் படங்களில், அனைத்து கதாபாத்திரங்களும் நல்லவர்களாகவே சித்தரிக்கபட்டிருப்பார்கள். சூழ்நிலை காரணமாகவே ஒரு மனிதன் கெட்டவனாக மாறுகிறான், ஆனால் அவன் எப்போதுமே கெட்டவனாக இருக்க முடியாது என்பார் விக்ரமன். விக்ரமன் படத்தின் பாடல்கள் மிக பெரிய ஹிட் ஆகும். அதேபோல, பட காட்சிகளில் வரும் பின்னணி இசையும் விக்ரமன் பேர் சொல்லும்.