"பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் பேசிய வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தப்படும் கருத்துகள், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், விவாத பொருளாக வாய்ப்புள்ளதாக கூறினார். இறுதியில், பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "நீங்கள் எடுக்கும் படத்திலும், நிஜத்திலும், அனைத்து சாதிகளும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக சாதியை குறிப்பிட சொல்கிறார்கள். இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என கேட்கப்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
"உரிமையை பெற சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது"
அதற்கு பதில் கூறிய வெற்றிமாறன், தன்னுடைய பிள்ளைகளுக்கு 'NO caste ' சான்றிதழ் வாங்க முயன்றதாகவும், ஆனால், அப்படி தர முடியாது என்று கூறப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும், 'அப்படி தர முடியாது சாதியை போட்டே ஆக வேண்டும்' என்று கூறப்பட்டதாகவும், தெரிவித்தார். "முடிந்தவரை சாதி சான்றிதழை தராமல் இருக்க வேண்டும் என்பதை முயற்சிக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சாதிச்சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் யாருக்கு தேவை இல்லையோ, அவர்களிடம் அதனை கேட்க வேண்டாம். எனக்கு தேவை இல்லை என நான் நினைக்கிறேன்", எனக்கூறினார். "ஆனால் அவர்களுக்கான உரிமையை வாங்க வேண்டிய இடத்தில், சாதிச்சான்றிதழை கொடுத்துதான் ஆகவேண்டும்", என அவர் மேலும் கூறினார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.