இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு; காரணம் என்ன?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்ஹில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி முதன்மை வேடங்களில் நடிக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் முதலில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். படத்தை தயாரிக்கும் தில் ராஜு எக்ஸ் தளத்தில் கேம் சேஞ்சரின் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதன்படி கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்தியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை சங்கராந்தி சமயத்தில் வெளியிட ஸ்லாட் கொடுத்த சிரஞ்சீவியின் விஸ்வம்பர படக்குழுவுக்கு தயாரிப்பாளர் தில் ராஜு நன்றி தெரிவித்தார்.
டிசம்பருக்குள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க திட்டம்
அதே வீடியோவில், கேம் சேஞ்சர் படத்திற்கான நிலுவையில் உள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட உள்ளதாகவும் தில் ராஜு கூறினார். ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில், விரைவில் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் உறுதிப்படுத்தினார். கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், சுபலேகா சுதாகர், சுனில், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பைச் சுத்தப்படுத்த முடிவு செய்யும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியைச் சுற்றி இந்தப் படம் உருவாகிறது. கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கின்றனர்.