2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: தர்மேந்திராவிற்கு பத்ம விபூஷண்; மம்மூட்டி, மாதவனுக்கு பத்ம விருதுகள்
செய்தி முன்னோட்டம்
நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் மற்றும் பொதுச்சேவை எனப் பல்வேறு துறைகளில் ஈடுஇணையற்ற சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் திரையுலகின் ஹீ-மேன் என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 24, 2025 அன்று தனது 89வது வயதில் மறைந்த அவருக்கு, கலைத்துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது மரணத்திற்குப் பின் வழங்கப்படுகிறது.
மம்மூட்டி
மம்மூட்டி மற்றும் அல்கா யாக்னிக் - பத்ம பூஷண்
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி மற்றும் இந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையுலகில் முத்திரை பதித்து வரும் மம்மூட்டியின் நடிப்புத் திறமைக்கும், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த அல்கா யாக்னிக்கின் இசைப் பணிக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாதவன்
ஆர்.மாதவன் மற்றும் சதீஷ் ஷாவிற்கு பத்மஸ்ரீ
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிரபலமான, தேசிய விருது வென்ற நடிகர் ஆர்.மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து வங்காளத் திரையுலகின் ஐகான் பிரசென்ஜித் சாட்டர்ஜி, பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ் ஷாவிற்கு மரணத்திற்குப் பின்னும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளுக்கான பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டாலும், டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் இந்த விருதுகள் அதிகாரப்பூர்வமாகப் பின்னாளில் வழங்கப்படும்.