வசூல் மழை; இரண்டு நாட்களில் ரூ.250 கோடியை நெருங்கியது ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன்
ஜூனியர் என்டிஆரின் தேவாரா பார்ட் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டிய நிலையில், உலகம் முழுவதும் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது. தெலுங்கு சினிமா இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விபரம்
சாக்நில்கின் கூற்றுப்படி, படம் அதன் பாக்ஸ் ஆபிஸ் பயணத்தை மிக உயர்ந்த குறிப்பில் தொடங்கியது. அதன் தொடக்க நாளில் உலகளவில் ரூ 140 கோடிக்கு மேல் வசூலித்தது. 2ஆம் நாளில் இப்படம் இந்தியாவில் ரூ.38.2 கோடி வசூல் செய்ததோடு, உலகளவில் மொத்த வசூல் ரூ.120.7 கோடியாக இருந்தது. உலக அளவில் இரண்டு நாட்களில் இப்படம் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்து ரூ.243 கோடி வசூல் செய்தது. இதுவரை, ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவருக்குமே அதிக வசூல் செய்த சோலோ ஓபனராக இது மாறியுள்ளது. கடைசியாக 2022இல் ராம் சரண் உடன் எஸ்எஸ் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த பிறகு, ஜூனியர் என்டிஆரின் .முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.