CWC 7 சர்ச்சை: வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் vs மாகாபா ஆனந்த் - என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியின் பிரபலமான 'குக் வித் கோமாளி' சீசன் 7 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதல் தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்று அழைக்கப்படும் திவாகர், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் கோமாளிகள் புகழ், கானா வினோத் ஆகியோர் மீது பரபரப்பு புகார்களை அடுக்கியுள்ளார். சமூக வலைதளங்களில் 'நடிப்பு அரக்கன்' என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் திவாகர் (முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்), சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, மாகாபா ஆனந்த் மது போதையில் தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், அதில் தனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
திவாகரின் குற்றச்சாட்டுகள்
திவாகர் மேலும், சக கோமாளியான புகழ் தனது அசுர வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவதாகவும், தன்னைத் தரக்குறைவாக நடத்தி படப்பிடிப்புத் தளத்தில் அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், கானா வினோத் தனது குடும்பத்தை பற்றி ஆபாசமாக பேசியதாகவும், தனக்கு இருக்கும் ரவுடிகள் செல்வாக்கை வைத்துத் தன்னை சென்னையில் வேலை செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திவாகர் கூறியுள்ளார்.
விளக்கம்
மாகாபா ஆனந்த் அளித்த விளக்கம்
திவாகரின் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மாகாபா ஆனந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். "படப்பிடிப்பு தளத்தில் ஒரு போட்டியாளரின் கணவர் முன்னிலையிலேயே, அந்தப் போட்டியாளரின் தோளில் கை போட்டு 'இத்தனை நாள் உன் புருஷன் கூட வாழ்ந்துட்ட, ஒரு நாள் என் கூட வா' என்று திவாகர் ஆபாசமாகப் பேசினார். இதைக் கேள்வி கேட்டதையே அவர் தாக்குதல் என்று திசை திருப்புகிறார்" என மாகாபா தெரிவித்தார். "தினமும் 18 மணி நேரம் வேலை செய்யும் என்னைப் பார்த்து மது போதையில் இருந்தேன் என்று சொல்வது நியாயமா? சேனல் நிர்வாகம் இதற்கு அனுமதிக்குமா?" என்று மாகாபா ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
பின்னணி
பழைய பின்னணி
இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதால் திவாகர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் என்பதையும் மாகாபா நினைவுகூர்ந்தார். திவாகர் மற்றும் கானா வினோத் இடையிலான மோதல் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' (2025-ன் இறுதியில்) காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அந்த பகை இப்போது 'குக் வித் கோமாளி' செட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. சிலர் திவாகருக்கு ஆதரவாகப் பேசினாலும், பெரும்பாலானோர் மாகாபா மற்றும் புகழுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'குக் வித் கோமாளி' நிர்வாகம் இந்த விவகாரத்தில் திவாகரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.