Loading...
மூத்த எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்: கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்
இரா. முருகன் உடல்நலக்குறைவு காரணமாக தனது 74-வது வயதில் காலமானா

மூத்த எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்: கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
04:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான இரா. முருகன் உடல்நலக்குறைவு காரணமாக தனது 74-வது வயதில் காலமானார். கடந்த 1977-ஆம் ஆண்டு கணையாழி இதழில் கவிதை மூலம் எழுத்துலகில் நுழைந்த இவர், நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நாவல்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் வழியாகத் தமிழ் வாசகர்களின் மனதைக் கவர்ந்தார். அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், மிளகு மற்றும் மூன்று விரல் உள்ளிட்ட இவரது படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும், கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது மற்றும் விஷ்ணுபுரம் விருது போன்ற பல்வேறு கவுரவங்களைப் பெற்றுள்ள இவரது அரசூர் வம்சம் நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

திரைத்துறை

பில்லா 2 பட வசனகர்த்தா

இலக்கியத்தைத் தாண்டி தமிழ்த் திரையுலகிலும் முத்திரை பதித்த இரா. முருகன், கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்' மற்றும் அஜித்குமாரின் 'பில்லா 2' ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

குறிப்பாக, 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மறதி ஒரு தேசிய வியாதி' என்ற கூர்மையான வசனம் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா இவரது எழுத்தாற்றலைப் பெரிதும் பாராட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் வீரரான முருகன் அஸ்வின் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்

இரா. முருகனின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

"சிலர் மொழியைக் காதலிப்பார்கள், சிலரை மொழியே காதலிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அவருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளையும் இருவருக்கும் இடையேயான நீண்டகால நட்பையும் நினைவுகூர்ந்துள்ளார்.

அவரது மறைவு தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கிய வட்டாரத்திற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT