LOADING...
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மலையாள நடிகை மற்றும் தமிழ் உதவி இயக்குநர் சென்னையில் கைது
மலையாள நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மலையாள நடிகை மற்றும் தமிழ் உதவி இயக்குநர் சென்னையில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2026
05:05 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் (ANIU) நடத்திய மாபெரும் சோதனையில், மெத்தம்பேட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திய மற்றும் விநியோகித்ததாக மலையாள நடிகை அஞ்சு கிருஷ்ணா மற்றும் தமிழ் உதவி இயக்குநர் வின்சி நிவேதா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை அன்று போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு (ANIU) அதிகாரிகள் நடத்திய சோதனையில் சினிமா துறையை சேர்ந்தவர்கள் உட்பட ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், விலை உயர்ந்த போதைப்பொருட்கள் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது

போலீசாரின் 'ஸ்கெட்ச்' மற்றும் கைது நடவடிக்கை

நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (33) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கோவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, போலி வாடிக்கையாளரை அனுப்பி வெங்கடேஷ் குமாரை வரவழைத்த போலீசார், வளசரவாக்கம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் வைத்திருந்த காரில் இருந்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சோதனையில், மலையாளத் திரைப்படங்களான 'சுமேஷ் & ரமேஷ்' மற்றும் தமிழில் 'வெள்ளிமலை', 'ஆரோ' போன்ற படங்களில் நடித்த நடிகை அஞ்சு கிருஷ்ணா மற்றும் உதவி இயக்குநர் வின்சி நிவேதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் கார்த்திக் ராஜா, யஷ்வந்த், ஸ்ரீராம், ஆல்விபின்ஷா உள்ளிட்ட 6 ஆண்களும் பிடிபட்டுள்ளனர்.

பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 கிராம் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine), 7 கிராம் ஓஜி கஞ்சா, 15 கிராம் சாதாரண கஞ்சா, எல்.எஸ்.டி (LSD) ஸ்டாம்ப், போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement