இனி படத்தின் தலைப்பும் தணிக்கை வாரியத்தின் பரிசீலனைக்கு உட்படும்
செய்தி முன்னோட்டம்
திரைப்படங்களுக்கு சான்றளிக்கும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC), இனி தேவைப்பட்டால் திரைப்படங்களின் தலைப்புகளைக் கூட மாற்றச் சொல்லலாம் என்றும், படத்தின் தலைப்பு என்பது தணிக்கை வாரியத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை திரைப்படங்களின் கதைக்களம் மற்றும் காட்சிகளை ஆய்வு செய்து தணிக்கைச் சான்றிதழ் (U, U/A, A) மட்டுமே வழங்கி வந்த தணிக்கை வாரியத்திற்கு, தற்போது இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வழிகாட்டுதல்கள்
தணிக்கை வாரியத்தின் புதிய வழிகாட்டுதல்கள்
தணிக்கை சான்றிதழுக்காக படத்தை விண்ணப்பிக்கும் போது கொடுக்கப்படும் தலைப்பை இறுதியானதாக கருத முடியாது.
தணிக்கைக் குழு அல்லது மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகே தலைப்பு உறுதி செய்யப்படும்.
தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படும் திரைப்படம் அனைத்து காட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான திரைப்படமாக இருக்க வேண்டும்.
இதுவரை திரைப்படத் தலைப்புகள் தொடர்பான பதிவு மற்றும் மாற்றங்களை இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் கில்ட் ஆகிய அமைப்புகளே கையாண்டு வந்தன.
இனி தணிக்கை வாரியமே தலைப்பு மாற்றங்களை வலியுறுத்தும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீஸ் தேதியை முன்னரே முடிவு செய்திருந்தாலும், வரையறுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவின்படியே தணிக்கைச் சான்றளிப்பு நடைபெறும்.