தொடர்ந்து தினமும் 1 மில்லியன் ஸ்ட்ரீம்கள்: ஸ்பாட்டிஃபையில் BTS ARIRANG ஆல்பம் அபார சாதனை
செய்தி முன்னோட்டம்
உலகப் புகழ்பெற்ற கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் (BTS), தங்களது அரிராங் (ARIRANG) ஆல்பம் மூலம் ஸ்பாட்டிஃபை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு சர்வதேச இசை ஆல்பமும் செய்திராத ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆல்பம் வெளியாகி பல நாட்கள் கடந்த நிலையிலும், உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் பிடிஎஸ் ரசிகர்கள் வழங்கும் ஆதரவினால் இந்த மைல்கல் சாத்தியமாகியுள்ளது. இசைத்துறையில் தங்களின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை இந்த ஏழு பேர் கொண்ட குழு மீண்டும் இதன் மூலம் நிரூபித்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
சாதனை விபரம்
தொடர்ந்து 100 நாட்களாக 1 மில்லியன் ஸ்ட்ரீம்கள் பெற்று சாதனை
ஸ்பாட்டிஃபை தளத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் தொடர்ந்து 100 நாட்களாக ஒவ்வொரு நாளும் தலா 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களைப் பெற்று அரிராங் ஆல்பம் சாதனை படைத்துள்ளது. ஆல்பத்தின் ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் பிரபலமாகாமல், அதில் உள்ள அனைத்துத் தனித்தனிப் பாடல்களும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் சமமாக ரசிக்கப்பட்டு வருவதையே இந்தத் தரவு காட்டுகிறது.
ஆறாவது ஆல்பம்
ராணுவப் பயிற்சிக்குப் பின் வெளியான பிடிஎஸ்ஸின் 6 ஆவது ஆல்பம்
பிடிஎஸ் குழுவின் உறுப்பினர்கள் தங்களது கட்டாய ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 6 ஆவது கொரிய ஸ்டுடியோ ஆல்பமாக அரிராங் கடந்த மார்ச் 20, 2026 அன்று வெளியானது. கொரியாவின் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடலான அரிராங் என்ற பெயரால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆல்பத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஹிப்-ஹாப், பாப் மற்றும் பாரம்பரிய கொரிய இசையின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தரவரிசையில் முதலிடம்
பில்போர்டு தரவரிசையில் முதலிடம் மற்றும் உலகளாவிய டூர் விபரங்கள்
சர்வதேச அளவில் பெரும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்ற இந்த ஆல்பம், 25 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஐடியூன்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்ததுடன், அமெரிக்காவின் புகழ்பெற்ற பில்போர்டு 200 பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது. இதன் லீட் சிங்கிள் பாடலான ஸ்விம் உலகளாவிய அளவில் ட்ரெண்டானது. தற்பொழுது பிடிஎஸ் குழுவினர் தங்களது உலகளாவிய இசைப்பயணத்தை மேற்கொண்டு வருவதுடன், லண்டன் மற்றும் பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களில் தங்களது அடுத்தகட்ட நிகழ்ச்சிகளை நடத்தத் தயாராகி வருகின்றனர்.