'பீட்சா' முதல் 'மஹான்' வரை: வித்தியாசமான கதைக்களம் மூலம் வசீகரித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் இன்று
குறும்படங்கள் மூலம், வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த முன்னோடிகளில் ஒருவர் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜை கூறலாம். டிஜிட்டல் யுகத்தில், யூட்யூபும், குறும்படங்களும் அப்போது தான் அறிமுகம் ஆகி வருகிறது. அந்த காலத்திலேயே, சிறிய பட்ஜெட்டில், அழகிய குறும்படம் ஒன்றை இயக்கி, 'நாளைய இயக்குனர்' என்ற விருதை வென்ற நம்பிக்கையில், வெள்ளிதிரையில் கால் பதித்து, தற்போது, இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டிருக்கும் கார்த்திக் சுப்பராஜின் பிறந்த நாள் இன்று. 'திகில்-காமெடி' என்று அப்போது வரை டெம்ப்ளேட்டாக திரைப்படங்கள் வெளிவந்த வேளையில், முதல்முறையாக, 'ரொமான்ஸ்-திகில்' என்ற புதிய பரிமாணத்தில், 'பீட்சா' திரைப்படத்தை இயக்கி இருந்தார். நடிகர் விஜய் சேதுபதி யார் என்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் எனக்கூறலாம்.
தேசிய விருது பெற்ற ஜிகர்தண்டா
தனது இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா'-வில் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில், பாபி சிம்ஹா, சித்தார்த்தை வைத்து ஒரு கேங்ஸ்டர் படத்தை தந்தார். இந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டர் என 2 தேசிய விருதுகளை தட்டி சென்றது. அதை தொடர்ந்து, மல்டி-ஹீரோ சப்ஜெக்ட்டாக 'இறைவி' என்ற கிளாசிக் படத்தை இயக்கினார். இதற்கிடையில், சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும், களம் இறங்கினார் கார்த்திக். அடுத்ததாக, ரஜினிகாந்த்தை அணுஅணுவாக ரசித்து இயக்கிய படம் தான் 'பேட்ட'. கார்த்திக்கின் திரைப்பயணத்தில் அது ஒரு மைல்கல் எனக்கூறலாம். தொடர்ந்து, தனுஷின் 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். விக்ரமின் 60வது படமான 'மஹான்' திரைப்படமும் கார்த்திக் இயக்கியது தான்.இந்த படத்தில், அப்பா-மகன் இருவரையும் இயக்கிய பெருமை, அவரையே சேரும்.