'விடாமுயற்சி' திரைப்படம் மூலம் மீண்டும் அஜித்துடன் இணையும் அர்ஜுன்
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பின் நடிக்கும் திரைப்படம் குறித்த அப்டேட் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இருப்பினும் அப்படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகாமல், படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் கருத்தொற்றுமை இல்லாததால் அவர் விலகியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு 'விடாமுயற்சி' என்று பெயரிடப்பட்ட நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. ஹாலிவுட் தரத்தில் இப்படத்தினை எடுக்க திட்டமிடப்பட்டதால் முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு அஜார்பைஜான் நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நடிகர் ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வைரல் புகைப்படம்
அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுப்பெற்ற நிலையில், நடிகர் அஜித் அஜார்பைஜான் நாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அதன் பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் இணைய அஜார்பைஜான் நாட்டிற்கு சென்றார். அப்போது அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றதால், அதன் மூலம் த்ரிஷா இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜூனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இது வைரலான பட்சத்தில், இப்படத்தில் நடிகர் அர்ஜுன் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.