தங்கர் பச்சன் இயக்கத்தில் அருவி: அதிதி பாலனின் 'கருமேகங்கள் கலைகின்றன'
2002-ல் அழகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானவர் தங்கர் பச்சன். இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும், ஒளிப்பதிவாளராகவும் இவர் திரையுலகில் இருந்து வருகிறார். இவர் தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் மன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ல் இவர் இயக்கிய களவாடிய பொழுதுகள் படத்திற்கு பிறகு இவர் இயக்கிக் கொண்டிருக்கும் அடுத்த படம் தான் கருமேகங்கள் கலைகின்றன. எதார்த்தமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் இவர், தான் எழுதிய சிறுகதையினை அடிப்படையாக கொண்டும் படங்களை இயக்கியுள்ளார். அதன் அடிப்படையில் கருமேகங்கள் கலைகின்றன படமும் அவரின் சிறுகதையை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் பாரதி ராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ. சந்திரசேகர் போன்றோர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
பல நடிகையிலிருந்து இறுதியாக அதிதி பாலன் தேர்வானார்
இப்படத்தின் பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் பாதிக்க பட்டதால், அனைத்து பணிகளும் 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவரின் உடல் நிலை சரியானதால் படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த முக்கிய கதாப்பாத்திரத்துக்கு, இந்தியாவில் இருந்து பல்வேறு மொழி நடிகைகள் தேர்வு செய்ததில் கடைசியாக இப்பாத்திரத்துக்கு பொருந்தும் படியாக அதிதி பாலன் தேர்வானது மகிழ்ச்சியை கொடுக்கிறது என இயக்குனர் தங்கர் பச்சன் கூறியுள்ளார். மேலும் மிகவும் சவாலான இந்த பாத்திரத்துக்கு தனது நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.